around-world

img

அறிவியல் கதிர்

♦ மிகை கடத்திகள்  புதிய ஆய்வு

மின்சாரத்தைக் கடத்துவதற்கு நாம் பயன்படுத்தும் உலோகக் கம்பிகளிலுள்ள ‘ரெசிஸ்டன்ஸ்’ (RESISTANCE) காரணமாக ஆற்றல் வீணாகின்றது. இதை தவிர்ப்பதற்காக மிகை  கடத்திகள் (SUPER CONDUCTORS) பயன்படுத்தப் படுகின்றன. அவை மின்சாரத்தை எந்தவித தடங்கலும் இல்லாமல் கடத்துவதால் ஏராளமான அளவு ஆற்றல் வீணாகாமல் காக்கப்படுகிறது.தற்போது இவை மருத்துவத்துறை, துகள் இயற்பியல் சோதனைகள், அதிக திறன்கொண்ட மின்சுற்றுகள்,அதிவேக தொடர் வண்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் மிகை கடத்திகள் வேலை செய்ய அவை சீரோ டிகிரி கீழ் குளிர்விக்கப்பட வேண்டும்.சில கடத்திகள் அப்சொல்யூட் சீரோ (absolute zero) எனப்படும் மைனஸ் 273 டிகிரி Cக்கு குளிர்விக்கப்பட வேண்டும். ஹைட்ரஜன், சல்பர், கார்பன் ஆகியவை கலந்த ஒரு கலவை சாதாரண வெப்ப நிலையிலேயே மிகை கடத்தியாக மாறுவது குறித்து 2020ஆம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்தக் கலவை அதீத அழுத்தத்தில் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். கிட்டத்தட்ட காற்று மண்டல அழுத்தத்தை போல 2.6மில்லியன் மடங்கு அழுத்தம் தேவைப்படும். இது பூமியின் அச்சின் சில பகுதிகளில் காணப்படும் அழுத்தத்திற்கு சமமானது.இந்த சோதனைகளில் சில குறைகள் சுட்டிக்காட்டப் பட்டதால் இப்போது மீண்டும் அதே சோதனையை செய்துள்ளார்கள்.  நியூயார்க்கிலுள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர் ரங்கா டியாஸ் இந்த புதிய சோதனையை செய்துள்ளார். இதை சரிபார்க்கும் பணியை சிக்காகோவிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர் நிலேஷ் சால்கே செய்துள்ளார்.அதிக வெப்ப நிலையில் மிகை கடத்தல் பண்பை வெளிப்படுத்தும்போது ஏற்படும் காந்த மாறுபாடுகள்(Magnetic susceptibility) இந்த சோதனையில் வெளிப்படுவதை அவர் உறுதி செய்துள்ளார். ஆனால் சாண்டியாகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஜார்ஜ் கிர்ஷ் போன்றோர் சோதனையின் தரவுகளை ஆட்சேபிக்கிறார்கள். பல குழுக்களும் இப்படிப்பட்ட சோதனைகளை செய்து இதே முடிவுகள் வர வேண்டும் என்கிறார் அவர்.  


♦ மருத்துவத்தில் ரோபோகேப்

  வயிற்றில் சுரக்கும் அமிலங்கள், செரிமான நொதிகள்,குடலிலுள்ள பிசுபிசுப்பான மியூக்கஸ் போன்றவற்றால் வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தடங்கல்களுக்கு ஆட்பட்டு இரத்த ஓட்டத்தில் கலப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.  இதை தவிர்ப்பதற்கு ‘ரோபோகேப்’( RoboCap) என்கிற சிறு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் மாத்திரை அளவில் உள்ள இதில் ஒரு மோட்டரும் மருந்துகள் வைக்கும் கலனும் உள்ளன. ஊசி மூலமோ அல்லது நேரடியாக இரத்த குழாயில்  செலுத்தப்படும் மருந்துகளையோ இதன் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.   இதன்  மேற்பரப்பில் உள்ள இடுக்குகள்,தோடு,செதில்கள் மூலம் வயிற்றிலுள்ள சளியை துடைத்துவிடுகின்றன. பன்றியில் செய்யப்பட சோதனையில், இந்தக் கருவி சளியினூடே சென்று இன்சுலின் மற்றும் வானோமைசின் மருந்துகளை சேர்த்தது என்கிறது செப்டம்பர் 28தேதியிட்ட ‘சயின்ஸ் ரோபோடிக்ஸ்’இதழ் கட்டுரை. வயிற்றில் 35நிமிடங்கள் புரட்டப்பட்ட   பின் இந்தக் கருவி செரிமான மண்டலத்தின் பிற பகுதிகள் வழியாக சென்றது.   இதே போன்ற கருவி 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் அது வயிற்றில் மட்டுமே மருந்தை செலுத்தக் கூடியதாக இருந்தது. சிறு குடலில் வேலை செய்யத் தக்கதாக இல்லை. அங்குதான் சில மருந்துகள் எளிதாக உறிஞ்சப்படும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவி அந்தக் குறையை போக்குவதுடன் எதிர்காலத்தில் பெரிய அளவிலான மருந்துகளையும் செலுத்தலாம் என்கிறார் எம்ஐடியை சேர்ந்த உயிரியல் மருத்துவ பொறியியலாளர் சிர்வா ஸ்ரீநிவாசன்.  இதனால் மருத்துவ மனையில் தங்குவதுவதை தவிர்க்கலாம். இது பெரும் புரட்சிகரமானது என்கிறார் ஸ்ரீநிவாசன்.


♦ ஆராரோ ஆரிராரோ

குழந்தைகளை கைகளிலோ நெஞ்சிலோ வைத்து ஆட்டி தூங்க வைத்தபின் தொட்டிலில் போடும்போது அவைகள் விழித்துக்கொண்டு அழும். இது பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை. இப்போது அறிவியல் இதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்திருக்கிறது. கைகளில் குழந்தைகளை ஐந்து நிமிடம் வைத்து பின் இன்னொரு ஐந்து அல்லது எட்டு நிமிடங்கள் உட்கார்ந்தநிலையில் வைத்துக் கொண்டிருந்தால் அவைகள் அசந்து தூங்கிவிடும். பின் தொட்டிலில் இட்டால் விழித்துக் கொள்ளாமல்  தூங்கிவிடுமாம். இத்தாலி நாட்டின் ட்ரென்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த  உளவியலாளர் கியான்லுக்கா எஸ்பாசிட்டோவும் அவரது குழுவினரும் செய்த ஆய்வில் பிறந்த முதல் மாதம் முதல் ஏழு மாத வயதான 21அழும் குழந்தைகளின் இதயத் துடிப்பை கண்காணித்தனர்.மேலும் தாய்மார்கள் அவர்களை கைகளில் வைத்து நடப்பதையும் அமர்ந்து வைத்துக்கொண்டு பின் தொட்டிலில் இடுவதையும் படம் பிடித்தனர். இதன் மூலம் குழந்தைகள் அழுதுகொண்டு இருக்கிறார்களா,அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களா,விழித்துக்கொண்டு அல்லது தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை மதிப்பிட முடிந்தது.   இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த சாதாரண விசயம்தான் என்றாலும் இந்த முறை எப்படி  வேலை செய்கின்றது  என்பது புரிந்து கொள்ளப்படவில்லை. தாய்மார்கள் குழந்தைகளை சுமந்துகொண்டு இருக்கும்போது அவற்றின் இதயத் துடிப்பு மெதுவாகின்றது. சில குழந்தைகள் தூங்கவும் செய்கின்றன. ஆனால் குழந்தைகள் தாயின் இயக்கத்திற்கு ஏற்ப வினை புரிகின்றன. தாய் வேகமாக நடந்தாலோ அல்லது குழந்தைகளை படுக்க வைத்தாலோ அவற்றின் இதயத் துடிப்பு வேகப்பட்டது.ஐந்து நிமிடம் உட்காரும்போது குழந்தையின் இதயத் துடிப்பு மெதுவான துடிப்புக்கு மாறுகிறது. பின் தொட்டிலில் இடும்போது அவை தூக்க நிலையிலேயே இருக்கின்றன. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக உட்கார்ந்த தாய்மார்களின் குழந்தைகளில் ஆறு குழந்தைகள் தொட்டிலில் போட்ட உடன் இதயத் துடிப்பு அதிகரித்து விழித்துக் கொண்டன. இந்த முறை முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது;ஆனால் குழந்தைகளை கவனித்துக் கொள்பவர்கள் இதை முயற்சிக்கலாம் என்கிறார் எஸ்பாசிட்டோ.


 

;